அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பகுதியில் நோய்வாய்ப்பட்டு வீழ்ந்த காட்டு யானையைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் இரவு பகலாகத் தீவிர சிகிச்சை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுற்றாடல் அமைச்சின் தகவலின்படி, சுமார் 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ஆண் யானைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வனவிலங்கு அதிகாரிகள், கால்நடை மருத்துவக் குழுவினர், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த யானை உடல் வலிமையுடன் காணப்படுவதுடன், பொதுவாக நல்ல உடல் ஆரோக்கியத்தைக் கொண்டிருப்பதாகத் தோன்றினாலும், வெளிப்புறக் காயங்கள் எதுவும் தென்படாத நிலையில் அதன் வயிறு வழக்கத்திற்கு மாறாக வீங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
யானையின் இந்த நிலைக்கு நச்சுப் பொருட்களை உட்கொண்டமை அல்லது பொலித்தீன் போன்ற செரிமானமாகாத பொருட்களை உட்கொண்டதால் ஏற்பட்ட குடல் அடைப்பு காரணமாக இருக்கலாம் என கால்நடை மருத்துவர்கள் ஆரம்பகட்டத்தில் சந்தேகிக்கின்றனர்.
கிழக்கு மாகாண வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவு, அம்பாறை வனவிலங்கு பிராந்திய அலுவலகம் மற்றும் சம்மாந்துறை வனவிலங்கு பிரிவு அலுவலகம் ஆகியன இணைந்து சிகிச்சை நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகின்றன.
இதற்கமைய, நேற்று (22) யானைக்கு அத்தியாவசியமான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், குறித்த பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக யானை வீழ்ந்துள்ள இடத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், சிகிச்சை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால், தடையின்றிச் சிகிச்சைகளைத் தொடரும் நோக்கில் மணலைப் பயன்படுத்தி நிலத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தின் 10 படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், யானையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதன் உடல்நிலையைக் கண்காணிக்கவும், உரிய நேரங்களில் மருந்துகளை வழங்கவும் வனவிலங்கு அதிகாரிகள் குழுவொன்று இரவு பகலாக சம்பவ இடத்தில் தங்கியிருந்து பணியாற்றி வருவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.








