முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு ஆலோசனை வழங்கிய முக்கிய பொருளாதார ஆலோசகர்களில் துமிந்த ஹுலங்கமுவ இடம்பெறவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையொன்றை நேற்று (22) வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம், ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும் பதவி வகித்த காலத்தில் அவருக்கு மூன்று முக்கிய பொருளாதார ஆலோசகர்கள் இருந்ததாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி, முன்னாள் திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஆர். எச். சமரதுங்க, திறைசேரிச் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரே அந்த மூவராவர்.
2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் போது ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, அப்போதைய சூழலில் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாது எனக் கூறப்பட்ட போதிலும், இந்த மூவரையும் தனது பொருளாதார ஆலோசகர்களாக நியமித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) உள்ளிட்ட முக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான கலந்துரையாடல்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்களும் இவர்களே என முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான அரசாங்க நிதி தொடர்பான நாடாளுமன்றக் குழு முன்னிலையிலும் இந்த அதிகாரிகள் ஆஜராகியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துமிந்த ஹுலங்கமுவ ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
மாறாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி மூலோபாயத்திற்குப் பங்களிப்பு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட தற்காலிகக் குழுவில், வர்த்தக சம்மேளனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராகவே அவர் செயற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றிய துமிந்த ஹுலங்கமுவ, தற்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் இந்தத் தெளிவுபடுத்தலை வெளியிட்டுள்ளது.








