புத்தளம் – அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியவெவ பகுதியில் நேற்று (22) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சாலியவெவ பகுதியில் உள்ள 19ஆவது மைல்கல் அருகே மாலை 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக மன்னார் நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது, பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதன்போது வீதியோரத்திலிருந்த பாலத்தில் மோதிய பேருந்து, வீதியை விட்டு விலகி சுமார் 200 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, உயர் அழுத்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்றபோது பேருந்தில் சுமார் 50 பயணிகள் பயணித்துள்ளனர். விபத்தைத் தொடர்ந்து சாலியவெவ பொலிஸாரும் அப்பகுதி மக்களும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், பேருந்தின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பேருந்து மோதியதில் உயர் அழுத்த மின்கம்பம் பலத்த சேதமடைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








