இலங்கைக்கு அருகில் காணப்பட்ட குறைந்த காற்றழுத்தப் பகுதி, தற்போது குறைந்த காற்றழுத்தப் பகுதியாக உருவாகியுள்ளதுடன், இதன் தாக்கத்தால் இன்று (22) நாடு முழுவதும் மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, இலங்கையைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளிலும் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகளைக் கவனிக்குமாறு பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேல், சபரகமுவ, மத்திய, வடக்கு, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன், இப்பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, மேல், சபரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களாலும் ஆபத்துகள் ஏற்படலாம். எனவே, அவற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.








