பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் ஆரம்பப் போட்டியில், மந்தகதியில் ஓவர் விகிதத்தைப் பேணிய குற்றத்திற்காக பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) அபராதம் விதித்துள்ளது.
இதன்படி, பாகிஸ்தான் அணிக்கு அதன் போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதமும், இலங்கை அணிக்கு அதன் போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
நேர ஒதுக்கீடுகளைக் கருத்திற்கொண்ட பின்னர், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் இரண்டு ஓவர்கள் குறைவாகவும், இலங்கை அணி ஒரு ஓவர் குறைவாகவும் வீசியுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, எமிரேட்ஸ் ஐ.சி.சி. நடுவர் குழுவைச் சேர்ந்த ஜெஃப் குரோ இந்த அபராதங்களை விதித்துள்ளார்.
ஐ.சி.சி.யின் நடத்தை விதிகளின் 2.22 ஆவது பிரிவின்படி, குறைந்தபட்ச ஓவர் விகிதத்தைப் பேணத் தவறும் அணிகளின் வீரர்களுக்கு, ஒதுக்கப்பட்ட நேரத்தில் வீசப்படாத ஒவ்வொரு ஓவருக்கும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 5 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும்.
பாகிஸ்தான் அணித் தலைவர் ஷஹீன் ஷா அஃப்ரிடி மற்றும் இலங்கை அணித் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகியோர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு முன்மொழியப்பட்ட தண்டனைகளை ஏற்றுக்கொண்டனர்.
இதனால், உத்தியோகபூர்வ விசாரணைகளை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
கள நடுவர்கள், மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







