சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை அந்நாட்டின் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2026 ஒக்டோபர் 13ஆம் திகதி சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் மரண தண்டனை தொடர்பான தீர்ப்பை ரத்து செய்துள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்ட இராஜதந்திர மற்றும் சட்ட ரீதியான முயற்சிகளின் பலனாக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும், இது அனோஜன் சிவராசாவுக்குப் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும் பிரதி அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் பங்களிப்புச் செய்த இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இலங்கை மற்றும் சவூதி அரேபிய சட்டக் குழுவினருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
அனோஜன் சிவராசாவின் வழக்கில் இந்தத் தீர்மானம் முக்கிய திருப்பமாக அமைந்துள்ள நிலையில், அவரது தற்போதைய சட்ட நிலைமை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.








