சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களை ஆராய்ந்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதியை, அப்பணியகத்தின் மேம்பாட்டுச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 டி-ஷர்ட்டுகளைக் கொள்வனவு செய்வதற்குப் பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.








