மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (19) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (20) அதிகாலை 1.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- மரங்களுக்கு அடியில் நிற்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தஞ்சமடைய வேண்டும்.
- நெல் வயல்கள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் திறந்த நீர்நிலைகள் போன்ற திறந்தவெளிப் பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- மின்சார இணைப்புடன் கூடிய தொலைபேசிகள் மற்றும் மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் படகுகள் போன்ற திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- சாய்ந்து விழும் அபாயமுள்ள மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
அவசர உதவிகள் மற்றும் அனர்த்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் உள்ளூர் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.








