இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதார சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ADB) 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கு அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி அமைச்சராகவும் செயற்படும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்வைத்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய, குறித்த நிதியைப் பெற்றுக்கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, இந்த 100 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் 50 மில்லியன் டொலர் ஆசிய அபிவிருத்தி வங்கியின் சாதாரண மூலதன வளங்களிலிருந்தும் (Ordinary Capital Resources), ஏனைய 50 மில்லியன் டொலர் சலுகை அடிப்படையிலான சாதாரண மூலதன வளங்களிலிருந்தும் (Concessional Ordinary Capital Resources) பெறப்படவுள்ளது.
இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறையில் நிலவும் முக்கிய சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில், குறித்த சீர்திருத்தத் திட்டத்தின் இரண்டாவது உபதிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
நீர் வள முகாமைத்துவத்தில் நிலவும் குறைபாடுகள், செயற்பாட்டு மற்றும் நிதி முகாமைத்துவத்தில் காணப்படும் வினைத்திறனின்மை, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயங்கள், சமூக உள்ளடக்கத்தில் நிலவும் குறைபாடுகள் மற்றும் தொடர்புடைய தரப்பினரிடையே போதிய ஒருங்கிணைப்பின்மை ஆகியவற்றை நிவர்த்தி செய்யும் சீர்திருத்தங்களுக்கு இந்தத் திட்டம் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்படவுள்ள மொத்தம் 620 மில்லியன் அமெரிக்க டொலர் கொள்கை அடிப்படையிலான கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிதியுதவி அமைந்துள்ளது. இந்தக் கடன் திட்டம் ஐந்து உபதிட்டங்களைக் கொண்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்துடன் (EFF) இணைந்த வகையில், 620 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறுவதற்கு கடந்த 2026 மார்ச் 16ஆம் திகதி அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இந்நிலையில், நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை சீர்திருத்தங்களுக்கான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அண்மைய அமைச்சரவைத் தீர்மானம் வழிவகுத்துள்ளது.








