முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திறந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘சிரிலிய சவிய’ (Siriliya Saviya) கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு, இன்று (13) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எனினும், ஷிராந்தி ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
அவருக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, நேற்று (12) சிறைச்சாலையில் இருந்தபோது ஷிராந்தி ராஜபக்ஷ திடீர் மாரடைப்புக்கு உள்ளானதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், அவருக்கு தற்போது திறந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது, மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், ஷிராந்தி ராஜபக்ஷ நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை உண்மை என்றபோதிலும், அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுவது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எந்தவொரு தகவலும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து, ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு இன்று சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறதா என்பது தொடர்பில் உடனடியாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த அறிக்கை கிடைக்கும் வரை வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 2 மணி வரை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.







