நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றைய தினம் (16) விநியோகத்திற்காக 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்துள்ள ‘GAS GOODWILL’ கப்பலிலிருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், எதிர்வரும் சில நாட்களில் தினசரி தேவையை விட அதிகமாக, நாளொன்றுக்கு 80,000 முதல் 100,000 வரையிலான 12.5 கிலோகிராம் வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களைச் சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, எரிவாயு நிரப்புதல் மற்றும் விநியோகப் பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்துள்ள ‘FRANCOIS’ கப்பல் எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளது.
இந்த எரிவாயுக் கையிருப்புகள் கிடைப்பதன் மூலம் நாட்டின் எரிவாயு விநியோகம் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், சந்தைக்கு வழமைபோன்று தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் என்றும் லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.








