இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 364 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த காலப்பகுதியில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 114 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அந்த அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஏனைய சம்பவங்கள் குறித்து மொத்தம் 9,613 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் அதிகளவான 1,554 முறைப்பாடுகள் கடந்த செப்டெம்பர் மாதத்தில் பதிவாகியுள்ளன.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பாலியல் வன்கொடுமை தொடர்பான 169 முறைப்பாடுகளும், பாலியல் அத்துமீறல் தொடர்பான 8 முறைப்பாடுகளும், சிறுவர் கடத்தல் தொடர்பான 40 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.
மேலும், போதைப்பொருள் கடத்தலுக்குச் சிறுவர்களைப் பயன்படுத்துவது தொடர்பாக 37 முறைப்பாடுகளும், சிறுவர்களைக் கொடூரமாக நடத்துவது தொடர்பாக 1,889 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இதேவேளை, சிறுவயது கர்ப்பம் தொடர்பாக 51 முறைப்பாடுகளும், சிறுவர் திருமணம் தொடர்பாக 9 முறைப்பாடுகளும், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பாக 99 முறைப்பாடுகளும் இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன், சிறுவர்களுக்கு எதிரான இணையவழி வன்முறைகள் தொடர்பாக 196 முறைப்பாடுகளும், குடும்ப வன்முறைகள் தொடர்பாக 46 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.








