பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலையைப் பயன்படுத்தி மனித உரிமைகளை ஒடுக்கவோ, அரசியல் எதிர்ப்புக் குரல்களை முடக்கவோ அல்லது அரசியல் அதிகாரத்தைக் குவிக்கவோ கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) எச்சரித்துள்ளது.
அவசரகால நிலையைத் தொடர்ந்து முக்கிய அரசியல் தலைவர்கள், மாகாண முதலமைச்சர் உள்ளிட்டோர் தன்னிச்சையாகக் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், இணையச் சேவைகளில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் ஆயுதப் படையினரின் நிலைநிறுத்தம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.
அந்த அமைப்பின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான பிரதிப் பணிப்பாளர் பாபு ராம் பன்ட் (Babu Ram Pant) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்தக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அவசரநிலைகளின்போது அரசாங்கங்கள் குறிப்பிட்ட வரையறைகளுக்கு உட்பட்டு விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றாலும், அவற்றைப் பயன்படுத்தி அடிப்படை உரிமைகளைப் பாதிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“அவசரகால நடவடிக்கைகள் என்பது மனித உரிமைகளை ஒடுக்குவதற்கோ, எதிர்ப்புக் குரல்களை முடக்குவதற்கோ அல்லது அதிகாரத்தைக் குவிப்பதற்கோ வழங்கப்படும் கட்டுப்பாடற்ற அனுமதியல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் அவசரகால நிலை மற்றும் ஆளுநர் ஆட்சியை அமுல்படுத்துவதற்கான மத்திய அமைச்சரவையின் பரிந்துரைகளுக்கு பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஒப்புதல் வழங்கியிருந்தார்.
பாகிஸ்தான் அரசியலமைப்பின் 232 மற்றும் 234ஆம் உறுப்புரைகளின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தில் பயங்கரவாதத் தாக்குதல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதுடன், அரசியலமைப்பு நிர்வாகக் கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளதாகக் கூறியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசரகாலப் பிரகடனத்தின் கீழ், கைபர் பக்துன்க்வா மாகாணம் தொடர்பான விடயங்களில் சட்டங்களை இயற்றும் அதிகாரம் பாகிஸ்தானின் தேசிய சட்டவாக்க அமைப்பான தேசிய சபை மற்றும் செனட் ஆகியவற்றைக் கொண்ட மத்திய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், சங்கங்களை அமைப்பதற்கான சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட சில அடிப்படை உரிமைகளை இடைநிறுத்தும் அதிகாரமும் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவித்தலின்படி, மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய நாடாளுமன்றத்தினால் மேற்கொள்ளப்படும். அதேவேளை, மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், ஆலோசகர்கள், விசேட உதவியாளர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் தமது பதவிகளை இழப்பர்.
இதற்கிடையில், அரசியலமைப்பின் 245ஆம் உறுப்புரையின் கீழ், சிவில் நிர்வாக அதிகாரிகளுக்கு உதவுவதற்காக பாகிஸ்தான் இராணுவத்தினரை மாகாணத்தில் நிலைநிறுத்தவும் மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மாகாணத்தில் இராணுவமயமாக்கலை மேலும் அதிகரித்து, மனித உரிமை மீறல்களுக்கான அபாயத்தை உயர்த்தக்கூடும் என சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரித்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாகிஸ்தானின் கடந்தகால சம்பவங்களைச் சுட்டிக்காட்டிய பாபு ராம் பன்ட், ஆயுதப் படையினரின் ஈடுபாடு சட்டவிரோதமாகப் பலத்தைப் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்கக்கூடும் எனத் தெரிவித்துள்ளார்.
சாதாரண பொலிஸ் கடமைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பதைத் தவிர்க்குமாறும், இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் பொறுப்புக்கூறலுக்கும் சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளுக்கும் உட்பட்டிருப்பதை உறுதிப்படுத்துமாறும் அவர் பாகிஸ்தான் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மற்றும் இணையச் சேவைகளில் ஏற்பட்டுள்ள தடைகளைக் கருத்திற்கொண்டு, அவசரகால நடவடிக்கைகளின் அவசியம் மற்றும் அவற்றின் விகிதாசாரத் தன்மை குறித்தும் அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அவசரகாலக் கட்டமைப்பின் கீழ் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்குச் சுயாதீன மேற்பார்வை பொறிமுறையொன்றை உருவாக்குமாறு பாகிஸ்தான் மத்திய அரசாங்கத்திடம் பாபு ராம் பன்ட் வலியுறுத்தியுள்ளார்.
“இந்த நெருக்கடியான தருணத்தில், அவசரகாலக் கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சுயாதீன மேற்பார்வை இருப்பதை மத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். அத்துடன், எந்தவொரு அவசரகால நடவடிக்கையும் நிலைமையை எதிர்கொள்வதற்குத் தவிர்க்க முடியாததும், விகிதாசாரத்திற்கு உட்பட்டதுமாக இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கைபர் பக்துன்க்வா மாகாணம் 2013ஆம் ஆண்டு முதல் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் ஆட்சியின் கீழ் இருந்து வருகிறது.
2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, மாகாண சபையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அக்கட்சி, தனது புதிய மாகாண அரசாங்கத்தை அமைத்தது.
பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு பாகிஸ்தான் பதிலளிக்கும் நடவடிக்கைகள், அந்நாடு ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளுக்கு அமைவாக இருக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, தன்னிச்சையான கைதுகள், அடிப்படைச் சுதந்திரங்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் அரசியல் எதிர்ப்புக் குரல்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவித்துள்ளது.








