சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரர், மன உளைச்சலுக்கு உள்ளாகி விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்தார் என, அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தித்தகல்லே ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்காக முன்னெடுத்து வரும் முயற்சிகள் தொடர்பில் இடம்பெற்ற நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரர் சிறைவாசம் காரணமாகக் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகக் குறிப்பிட்ட ஆனந்தசிறி தேரர், அவர் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாகக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
“அவரிடம் விஷப் போத்தல் ஒன்று இருந்தது. அதனை அருந்தி உயிரிழக்கப் போவதாக அவர் கூறினார்” என ஆனந்தசிறி தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, தாம் தலையிட்டு ஞானசார தேரரை அந்த எண்ணத்தைக் கைவிடுமாறு சமாதானப்படுத்தியதாகவும், பின்னர் அந்த விஷப் போத்தல் அகற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளின்போது தமக்கும் ஞானசார தேரருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் நிலவியதாகவும் ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
எனினும், ஞானசார தேரரின் மனநிலை மற்றும் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சூழ்நிலைகள் குறித்து அறிந்த பின்னர், அவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மன்னிப்பு வழங்க வேண்டும் எனக் கோரி, பொதுமக்களிடம் கையெழுத்துகளைச் சேகரிக்கும் பிரசாரத்தை ஆனந்தசிறி தேரர் தற்போது முன்னெடுத்து வருகின்றார்.
இந்தப் பிரசாரத்தின் ஊடாக இதுவரை 225,000 இற்கும் அதிகமான கையெழுத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், பிரசாரத்தைக் கைவிடுமாறு தமக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையிலும் அதனைத் தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரசாரத்தைக் கைவிடுமாறு தமக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதுடன், அதனை நிறுத்துவதற்காக நிதியுதவி வழங்க முன்வந்தவர்களும் இருந்ததாக ஆனந்தசிறி தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், குறித்த மனுவை உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கும் வரை தமது பிரசாரத்தைத் தொடர்வதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.








