இலங்கையின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2026ஆம் ஆண்டில் 4 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2027ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாகக் குறையும் எனவும் சர்வதேச நாணய நிதியம் எதிர்வுகூறியுள்ளது.
2025ஆம் ஆண்டில் 5 சதவீதமாகப் பதிவான பொருளாதார வளர்ச்சி, அடுத்தடுத்த ஆண்டுகளில் குறைவடையும் என அந்த அறிக்கையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதேவேளை, பொருட்களின் விலை அதிகரிப்பைக் குறிக்கும் பணவீக்கம் 2027ஆம் ஆண்டில் 5.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2025ஆம் ஆண்டில் -0.5 சதவீதமாகவும், 2026ஆம் ஆண்டில் 5.3 சதவீதமாகவும் காணப்பட்டது.
இதற்கிடையில், நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2026ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 0.5 சதவீதமாகவும், 2027ஆம் ஆண்டில் 0.3 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் நடப்புக் கணக்கு உபரி 1.6 சதவீதமாகப் பதிவாகியிருந்தது.
இதேவேளை, இலங்கையின் வேலையின்மை விகிதம் 2027ஆம் ஆண்டு வரையில் 3.9 சதவீதமாகத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஆசியப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 2027ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.








