இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 28 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், அதன் வருமான இலக்கு 30 பில்லியன் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான சூழ்நிலைகளில் அரச நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் ஒரு பகுதியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தனியார் நிறுவனங்கள் தமது வருமானத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், களஞ்சியசாலைகளில் எரிபொருள் இருப்பு காணப்பட்டபோதிலும் அதனை விநியோகிக்காமல் இருப்பதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் தவறானவை எனத் தெரிவித்த அவர், தனியார் எரிவாயு நிறுவனங்களும் இதேபோன்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிறுவனத்தினால் ஒரு குறிப்பிட்ட விலையில் எரிபொருளை வழங்க முடியும் என்றால், தனியார் நிறுவனங்களால் ஏன் அதே விலையில் வழங்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போட்டித்தன்மையின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிப்பதற்காகவே தனியார் துறையினருக்கு வாய்ப்பளிக்கப்பட்டதாகவும், தற்போதைய நிலைமையில் அந்த வாய்ப்பின் பயன் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் சில நகரங்களில் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மட்டுமே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய நிறுவனங்கள் எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினால், அந்தப் பகுதிகளில் வாழும் மக்களின் நிலைமை என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலைமையின் பாரதூரமான தன்மையைக் கருத்திற்கொண்டே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நாடு முழுவதும் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.








