பிக்கு ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தியா ஏக்னலிகொடவைக் குறிவைத்து முன்னெடுக்கப்படும் வெறுப்புப் பேச்சுகள், அவதூறுகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் பிரசாரங்களுக்கு இலங்கையின் ஆறு ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக ஒக்டோபர் 12ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையில், இத்தகைய பிரசாரங்கள் சந்தியா ஏக்னலிகொடவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், நாட்டில் வெறுப்புணர்வுக் கலாசாரத்தையும் மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.
தனது கணவரும் ஊடகவியலாளருமான பிரகீத் ஏக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், உண்மையையும் நீதியையும் கோரி சந்தியா ஏக்னலிகொட கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருவதாகவும் அந்த அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சட்டபூர்வமான நீதித்துறை நடைமுறைகளின் ஊடாக எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்காக அவர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளன.
பிரகீத் ஏக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், 2019ஆம் ஆண்டு மே மாதம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், குறித்த மன்னிப்பை உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியதைத் தொடர்ந்து, அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஞானசார தேரருக்கு எதிரான ஆரம்ப முறைப்பாடு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், குறித்த வழக்கு நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினராக சந்தியா ஏக்னலிகொட செயற்பட்டதாகவும் ஊடக அமைப்புகள் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
எனவே, ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு சந்தியா ஏக்னலிகொடவே காரணம் எனக் குற்றஞ்சாட்டும் முயற்சிகளைத் தாம் நிராகரிப்பதாகவும் அவை தெரிவித்துள்ளன.
கருத்துச் சுதந்திரத்தைத் தாம் உறுதியாக ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஊடக அமைப்புகள், அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி தனிநபர்கள் அல்லது சமூகங்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களை விடுப்பதையோ, வன்முறையைத் தூண்டுவதையோ அல்லது வன்முறையை ஊக்குவிக்கும் பிரசாரங்களை முன்னெடுப்பதையோ நியாயப்படுத்த முடியாது என வலியுறுத்தியுள்ளன.
சந்தியா ஏக்னலிகொடவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் நடவடிக்கைகளைத் தடுக்கவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
மேலும், அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் மத மற்றும் இன உணர்வுகளை அரசியல் உள்ளிட்ட பிற நலன்களுக்காகப் பயன்படுத்தும் முயற்சிகளை நிராகரிக்க வேண்டும் என்றும் அவை வலியுறுத்தியுள்ளன.
இந்தக் கூட்டு அறிக்கையில், சுதந்திர ஊடக இயக்கம் (FMM), இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர்கள் சங்கம் (SLWJA), ஊடக ஊழியர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (FMETU), தெற்காசிய ஊடகங்களில் பெண்கள் அமைப்பு (SWAM), இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் (SLMMF) மற்றும் இலங்கை தமிழ் ஊடகக் கூட்டமைப்பு (SLTMA) ஆகிய ஆறு அமைப்புகளும் கையெழுத்திட்டுள்ளன.








