இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெறக்கூடிய திறமையான வீரர்களை உருவாக்குவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியின் மோசமான ஆட்டங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், நிர்வாக மறுசீரமைப்புகளை மேற்கொள்வது மாத்திரம் வெற்றிகளை உறுதிப்படுத்தாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், சர்வதேசப் போட்டிகளில் வெற்றிபெறக்கூடிய திறமையான கிரிக்கெட் வீரர்களையும் உருவாக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
“நாங்கள் மறுசீரமைப்புகளை மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எனினும், போட்டிகளில் வெற்றிபெற வீரர்களை உருவாக்க வேண்டும். திறமையான வீரர்கள் இல்லாதபோது போட்டிகளில் தோல்வியடைகின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
அடிமட்டத்திலிருந்து கிரிக்கெட் வீரர்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாகவும், அதன் பலன்களை உடனடியாக எதிர்பார்க்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிரிக்கெட் விளையாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக கிரிக்கெட் மறுசீரமைப்புக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கிரிக்கெட் நிர்வாகத்தை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அதன் மூலம் தற்போதைய நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய நிர்வாகக் குழுவொன்றை நியமிப்பதற்கான வழி ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போட்டித்தன்மை மிக்க வீரர்களை உருவாக்கி, இலங்கை கிரிக்கெட் அணியை மீண்டும் வெற்றிப் பாதைக்குக் கொண்டுவரக்கூடிய கட்டமைப்பை உருவாக்குவதே இதன் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏனைய கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தொடர்ச்சியாகத் தமது திறமைகளை மேம்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சர்வதேச மட்டத்தில் போட்டியிடக்கூடிய வீரர்களை இலங்கையும் உருவாக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 (T20) தொடரையும் இலங்கை அணி இழந்துள்ள நிலையில், அணியின் தொடர் தோல்விகள் குறித்து விமர்சனங்கள் அதிகரித்துள்ள பின்னணியில் அமைச்சர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.








