இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜயசூரிய, இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு சவூதி அரேபியாவிடம் பகிரங்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து, அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கான மனிதாபிமானக் கோரிக்கைக்கு இலங்கையர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிப்பதாக அவர் தனது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையர்களாகிய நாம் மதம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து ஒன்றாக நிற்கின்றோம். எமது சக இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு சவூதி அரேபிய இராச்சியத்திடம் பணிவுடன் கோரிக்கை விடுக்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது பதிவில் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் மற்றும் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனத் ஜயசூரியவின் இந்தக் கோரிக்கையானது, அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு இலங்கையின் விளையாட்டுத்துறையிலிருந்து கிடைத்துள்ள முக்கிய ஆதரவாகக் கருதப்படுகிறது.
கல்முனையைச் சேர்ந்த இலங்கைப் புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜன், இஸ்லாம் மதத்தை அவமதிப்பதாகக் கருதப்பட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த தண்டனைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை சட்டத்தரணிகள் குழுவொன்று சவூதி அரேபிய சட்டத்தரணிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீட்டைச் சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்காக இலங்கை அரசாங்கமும் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







