அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் கருதிக்கொண்டு, தமிழ் மொழியில் பொதுவெளியில் கருத்துக்களை வெளியிடும் சில எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இனவாதத்தைத் தூண்டும் வகையில் சிலர் பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், அவர்களின் கருத்துக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு உடனடியாகப் பகிரப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய செயற்பாடுகள் நாட்டில் மீண்டும் சிங்கள பௌத்த தேசியவாத அரசியலை வலுப்படுத்துவதற்கு வழிவகுப்பதாகவும், இதனால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சிக்கும் அவரது சீர்திருத்த முயற்சிகளுக்கும் தடைகள் ஏற்படுவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கலபொடஅத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை தவறு என எவரும் தற்போது கூறவில்லை. மாறாக, அவரது துறவற ஆடை தொடர்பான விவகாரமே சர்ச்சையாக மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பௌத்த மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி இரண்டு வாரங்களுக்குள் தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும், பௌத்த மதத் தலைமைகளின் அழுத்தங்களுக்கு மத்தியிலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் வேரூன்றியுள்ள இனவாதப் போக்கை முழுமையாக மாற்றுவதற்கு நீண்ட காலம் தேவைப்படும் எனக் குறிப்பிட்ட அவர், ‘அரகலய’ மக்கள் போராட்டமே இனவாதத்தைத் தற்காலிகமாகக் கட்டுப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரத்தில் ஜனாதிபதிக்கு உதவ விரும்பினால், தமிழ் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் மற்றும் யூடியூப் ஊடகவியலாளர்கள் அமைதி காக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேவேளை, தமிழ் பேசும் மக்கள் இவ்வாறான விவகாரங்கள் குறித்து அதிகளவில் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்த்து, தமது பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
“ஜனாதிபதி அவர்களே, எங்களது பிரச்சினைகளுக்கும் நியாயமான தீர்வுகளைத் தாருங்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்து அமைதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டே நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியை நிம்மதியாக ஆட்சி செய்ய அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்விடயங்களைத் தனது அறிக்கையில் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.








