இலங்கையில் புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான பல்வேறு கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகப் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழுவுடன் ஒக்டோபர் 09ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், கல்வித் துறையில் பண்புசார் மற்றும் கட்டமைப்புசார் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான பல்வேறு தீர்மானமிக்க கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தேசிய கல்வி ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு தொடர்பான எண்ணக்கருத் தாள், தேசிய கல்வி நிறுவகத்தினால் (NIE) சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு மற்றும் முதலாம் ஆண்டு முதல் 11ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கான மதிப்பீட்டு வடிவமைப்பு ஆகியவற்றுக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உயர்தரத்துக்கான மதிப்பீட்டு வடிவமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டு வருவதுடன், தேசிய கல்விச் சபையை அமைப்பதற்கான அறிக்கைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான வரைவைத் தயாரிப்பதற்கு கல்வி அமைச்சின் ஊடாகக் குழுவொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
டிஜிட்டல் கல்விக்கு ரூ.96 பில்லியன் ஒதுக்கீடு
கல்வித் துறையை டிஜிட்டல்மயமாக்குவதற்கான கொள்கை, தேசிய கல்வி ஆணைக்குழுவின் அனுமதியைத் தொடர்ந்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அது எதிர்காலத்தில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
பாடசாலைக் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஐந்து ஆண்டுகளுக்கு 96 பில்லியன் ரூபா செலவிலான திட்ட முன்மொழிவுக்கும் கொள்கை ரீதியான அனுமதி கிடைத்துள்ளது.
அரச மற்றும் அரச சார்பற்ற கல்வித் துறைகளில் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்தும் செயற்றிட்டத்தை வலுப்படுத்துவதற்காக உபகுழுவொன்றும் செயற்பட்டு வருகின்றது.
உயர்கல்விக்கு ஒருங்கிணைந்த விண்ணப்ப முறை
உயர்தரப் பரீட்சையை நிறைவுசெய்யும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு வெவ்வேறாக விண்ணப்பிப்பதால் ஏற்படும் நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, உயர்கல்விக்கான அனைத்து தெரிவுகளுக்கும் ஒரே வலையமைப்பின் ஊடாக விண்ணப்பிக்கக்கூடிய ஒருங்கிணைந்த சேர்க்கைக் கொள்கையைத் தயாரிக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட உரிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையை 2028ஆம் ஆண்டு முதல் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வியில் புதிய மாற்றங்கள்
உயர்கல்வித் துறையில் பொறியியல், மருத்துவம், மருத்துவப் பட்டப்பின் கல்வி மற்றும் விவசாயம் ஆகிய துறைகளுக்கான கொள்கைகளைத் தயாரிப்பதற்காக விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கல்விப் பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
அத்துடன், அரச சார்பற்ற பட்டம் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பட்டங்களை வழங்குவதற்கான அந்தஸ்தை வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களைக் கொண்ட புதிய கொள்கைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மாணவர்களின் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நலனை உறுதிப்படுத்துவதற்காக, முதலாம் ஆண்டு முதல் 13ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களை ஐந்து பிரிவுகளாக வகைப்படுத்தி வழிகாட்டல் தொடர் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்னோடித் திட்டத்தை எதிர்வரும் நவம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கும், முழுமையான நடைமுறைப்படுத்தலை அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தொழிற்கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறையை (TVET) தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்குதல், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் தொழிற்சாலைசார் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்ட மூலோபாயத் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
ஆசிரியர் ஆட்சேர்ப்பு மற்றும் மாணவர் நலனுக்கும் முக்கியத்துவம்
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்களை விரைவாக ஆட்சேர்த்தல், ஆசிரியர் இடமாற்றங்களை முறைப்படுத்துதல் மற்றும் பாடசாலை மாணவர்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
அத்துடன், மாணவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு மற்றும் செய்முறைச் செயற்பாடுகளை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட கல்வித் துறைசார் பல்வேறு விடயங்கள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் தன்னார்வ ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.








