கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடை களையப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுதலை செய்யக் கோரியும் மகா சங்கத்தினரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை இன்று (10) கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து ஆரம்பமானது.
பாதயாத்திரை ஆரம்பமாவதற்கு முன்னர், கண்டி மகுல் மடுவ பகுதியில் விசேட ஆசீர்வாத நிகழ்வும் நடைபெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த உலப்பனே சுமங்கல தேரர், தற்போதைய அரசாங்கம் ஞானசார தேரருக்கு எதிராகத் தன்னிச்சையான முறையில் மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல தேரர் தேசத்தினதும் சம்புத்த சாசனத்தினதும் பாதுகாப்புக்காகக் குரல் கொடுத்ததைப் போன்று, ஞானசார தேரரும் நாடு, தேசம் மற்றும் சாசனத்தின் முன்னேற்றத்திற்காகவே குரல் எழுப்பியதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டது அவரது தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல எனக் குறிப்பிட்ட உலப்பனே சுமங்கல தேரர், அவர் சிறைத்தண்டனை அனுபவிப்பது முழு தேசம் மற்றும் சாசனத்திற்காகவே எனத் தெரிவித்தார்.
எனவே, அவரைத் தனிமைப்படுத்தாமல், எவ்வித நிபந்தனைகளுமின்றி அவருக்கு ஆதரவாக அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் வாரியப்பொல ஸ்ரீ சுமங்கல தேரரின் சிலைக்கு அருகிலிருந்து ஆரம்பமான இந்தப் பாதயாத்திரை, ஞானசார தேரர் சிறைவைக்கப்பட்டுள்ள இடம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
ஞானசார தேரருக்கு விடுதலை கிடைக்கும் வரையிலும், அநீதிக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டம் கைவிடப்பட மாட்டாது எனத் தெரிவித்த உலப்பனே சுமங்கல தேரர், தற்போதைய அடக்குமுறைச் சூழலுக்கு எதிராக வன்முறையற்ற முறையில் இந்தப் பாதயாத்திரையில் இணைந்துகொள்ளுமாறு பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்தார்.








