அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடிய போதிலும், இதுவரை உரிய தீர்வுகள் கிடைக்கவில்லை என அந்தச் சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பு தற்போது பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், தகைமை வாய்ந்த விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறுவதுடன், புதிய நியமனங்களும் போதியளவில் இடம்பெறாமையால் அரச பல்கலைக்கழகக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருடன் அண்மையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அவற்றின் மூலம் எவ்விதத் தீர்வும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதி நிதி அமைச்சருக்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், குறித்த கடிதங்களுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்பதுடன், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாத நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.








