குடிநீர் போத்தல் ஒன்றை சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில், Cluster Holdings (Pvt) Ltd நிறுவனத்தால் நடத்தப்படும் பண்டாரவளை Rest House விடுதிக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை நிறுவனம் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் நேற்று (7) இந்த அபராதத்தை விதித்துள்ளது.
2026 செப்டெம்பர் 23ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது, ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் அதன் அதிகபட்ச சில்லறை விலை 120 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 80 ரூபாய் அதிகமாகவும், சுமார் 67 சதவீதம் அதிக விலையிலும் குடிநீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த நிறுவனத்திற்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்ததையடுத்து, ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின் விலைகளை நுகர்வோர் சரிபார்ப்பதுடன், விலை மீறல்கள் தொடர்பில் அலுவலக நேரங்களில் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்யுமாறும் அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளது.








