சர்வதேச அங்கீகாரம் பெற்ற யெமன் அரசாங்கம், ‘Dawn of Yemen’ என்ற எதிர்த்தாக்குதல் நடவடிக்கையை ஆரம்பித்ததிலிருந்து ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தனது இராணுவம் குறைந்தது 2,103 இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளில் 1,860 ஹூதி போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யெமன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி இன்று காலை பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹூதி அமைப்பு தெரிவித்துள்ளது.
செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் அப்ஹா மற்றும் கிங் காலித் சர்வதேச விமான நிலையங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஹூதி தாக்குதல்களில் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 36 பேர் காயமடைந்ததாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஈரானில் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பம்
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரச ஒளிபரப்பு நிறுவனமான IRIB தெரிவித்துள்ளது.
நஜஃப் நகரிலிருந்து ஈராக் ஏர்வேஸ் விமானம் ஒன்று தெஹ்ரானுக்கு வந்ததையடுத்து, சர்வதேச விமான சேவைகள் இருவழியாகவும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








