சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) வலியுறுத்தியுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, அனோஜனுக்கு எதிரான குற்றச்சாட்டு கருத்துச் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
முகமது நபியை இழிவுபடுத்தும் வகையிலான கருத்தொன்றை சமூக ஊடகத்தில் பதிவிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு, சவுதி அரேபிய மேன்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
வெறுமனே கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக எவரையும் சிறையில் அடைக்கவோ அல்லது மரண தண்டனை உள்ளிட்ட தண்டனைகளுக்கு உட்படுத்தவோ கூடாது என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், அனோஜன் தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மாம் சிறைச்சாலைக்கு சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் இன்று (08) செல்லவுள்ளார்.
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது மற்றொரு கைதி அனோஜனைத் தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கண்டறிவதற்காகவே தூதுவர் அங்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, அனோஜனுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக சவுதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்காக அந்நாட்டுக்குச் சென்றுள்ள இலங்கைப் பிரதிநிதிகள் குழு, இன்றும் அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
நேற்று (07) சவுதி அரேபிய சட்டத்தரணிகளிடம் இது தொடர்பான சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் அனோஜனின் மேன்முறையீட்டைச் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








