நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு, காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது கடற்பரப்புகளில் தற்காலிகமாக மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.








