2025/26 பொருளாதாரக் கணக்கெடுப்பின் கீழ் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான நாடளாவிய கணக்கெடுப்பை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இந்தக் கணக்கெடுப்பு எதிர்வரும் 2026 டிசம்பர் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.
கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு வருகை தரும்போது, பொதுமக்கள் துல்லியமான தகவல்களை வழங்குமாறு தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கணக்கெடுப்பை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இலங்கையின் விவசாயத் துறையின் தற்போதைய நிலை, கட்டமைப்பு மற்றும் எதிர்கால அபிவிருத்தித் தேவைகள் தொடர்பான துல்லியமான மற்றும் புதுப்பிக்கப்பட்ட தரவுத்தளத்தை உருவாக்குவதே இந்தக் கணக்கெடுப்பின் நோக்கம் எனத் தெரிவித்தார்.
கணக்கெடுப்பு ஒக்டோபர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தொழில்நுட்ப வழிகாட்டுதலின் கீழ் 2026 டிசம்பர் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
முந்தைய கணக்கெடுப்புகளில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய அச்சிடப்பட்ட வினாத்தாள்களுக்குப் பதிலாக, இம்முறை கணக்கெடுப்பு அதிகாரிகள் கணினி உதவியுடனான நேர்காணல் முறை (CAPI) மற்றும் டெப்லெட் கணினிகளைப் பயன்படுத்தி தரவுகளைச் சேகரிக்கவுள்ளனர்.
விவசாயிகள் மற்றும் விவசாயக் குழுக்கள், காணிகள் மற்றும் பயிரிடப்பட்ட நிலப்பரப்புகள், விவசாய இடுபொருட்கள், கால்நடைகள் மற்றும் விவசாய உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான தகவல்கள் இந்தக் கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படவுள்ளன.
நாட்டின் விவசாயத் துறையின் எதிர்காலத் திட்டமிடல் மற்றும் அபிவிருத்திக்கு ஆதரவளிக்கும் வகையில் விரிவானதும் நம்பகமானதுமான தரவுத்தளத்தை உருவாக்க இந்தக் கணக்கெடுப்பு உதவும் என தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 2026ஆம் ஆண்டின் பெரும்போக மற்றும் சிறுபோகப் பருவங்களை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட விவசாயத் தரவுகள் இந்தக் கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படவுள்ளன.








