உலகளாவிய பேரியல் பொருளாதார அபாயங்கள் இலங்கையின் நிதி அமைப்புக்கு தற்போது மிக முக்கியமான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய முறைமைக்குரிய இடர் ஆய்வு (Systemic Risk Survey – SRS) தெரிவித்துள்ளது.
அதிகரித்துள்ள புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் எதிர்கால நிலை குறித்த நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் இந்த அபாயம் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் உணரப்பட்ட அபாயங்களில் உலகளாவிய பேரியல் பொருளாதார அபாயங்கள் 26 சதவீதமாக பதிவாகியுள்ளன. இது 2026ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 14 சதவீதமாக இருந்தது.
புவிசார் அரசியல் பதற்றங்கள், ஏனைய நாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் எதிர்கால நிலை குறித்த நிச்சயமற்ற தன்மை ஆகியவை இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், இதே காலப்பகுதியில் இலங்கையின் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பான ஒட்டுமொத்த நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஒரு வருடத்தை உள்ளடக்கிய குறுகிய காலம் மற்றும் அடுத்த மூன்று வருடங்களை உள்ளடக்கிய நடுத்தர காலம் ஆகிய இரு காலப்பகுதிகளிலும் இலங்கையின் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மை தொடர்பான நம்பிக்கை அதிகரித்துள்ளதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எதிர்மறை நிகழ்வொன்று இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறு தொடர்பான மதிப்பீடுகள் கலவையான போக்கைக் காட்டியுள்ளன.
அடுத்த ஒரு வருடத்தில் அவ்வாறான நிகழ்வொன்று இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறு சற்று அதிகரித்துள்ளதாகவும், அடுத்த மூன்று வருடங்களுக்கான சாத்தியக்கூறு முந்தைய ஆய்வுடன் ஒப்பிடுகையில் சற்று குறைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் உலகளாவிய பேரியல் பொருளாதார அபாயங்கள், நிதி மற்றும் இறையாண்மை தொடர்பான அபாயங்கள், பொதுவான உள்நாட்டு பேரியல் பொருளாதார அபாயங்கள், நிதி உட்கட்டமைப்பு அபாயங்கள், நிதிச் சந்தை அபாயங்கள், நிதி நிறுவனங்கள் தொடர்பான அபாயங்கள் மற்றும் பொதுவான அபாயங்கள் உள்ளிட்ட ஏழு பரந்த அபாய வகைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.
2026ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான இந்த ஆய்வு, மத்திய வங்கியின் பேரியல் கண்காணிப்புத் திணைக்களத்தினால் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 14 வரை நடத்தப்பட்டது. இதில் 158 நிறுவனங்கள் பங்கேற்றதுடன், 100 சதவீத பதில் விகிதம் பதிவாகியுள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் ஆய்வில் பங்கேற்றவர்களின் அபாயங்கள் குறித்த கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை என்றும், அவை மத்திய வங்கியின் சொந்தக் கருத்துக்களை அவசியமாகப் பிரதிபலிக்கவில்லை என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.










