பிரபல பிரித்தானிய எழுத்தாளரும் முன்னாள் அரசியல்வாதியுமான ஜெஃப்ரி ஆர்ச்சர் தனது 86ஆவது வயதில் காலமானார்.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான தனது எழுத்துப் பயணத்தில், ‘கேன் அண்ட் ஏபல்’ (Kane and Abel) மற்றும் ‘கிளிஃப்டன் க்ரோனிக்கிள்ஸ்’ (Clifton Chronicles) உள்ளிட்ட படைப்புகள் மூலம் உலகளவில் 300 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகளை விற்பனை செய்துள்ளார்.
தனது பெரும்பாலான நாவல்களின் கதைக்களங்களை, தனது சொந்த ஊரான சோமர்செட்டில் உள்ள வெலிங்டனை மையமாகக் கொண்டு அமைத்திருந்தார்.
எழுத்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், தனது வீட்டில் அவர் “திடீரெனவும் அமைதியாகவும்” உயிரிழந்ததாக அவரது பதிப்பாளர் ஹார்பர்காலின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்ச்சர், 1987ஆம் ஆண்டு டெய்லி ஸ்டார் நாளிதழுக்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் பொய் கூறி ஏமாற்றியமை நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2001ஆம் ஆண்டு போலிச் சாட்சியம் அளித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
1940ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி வடக்கு லண்டனில் பிறந்த ஜெஃப்ரி ஆர்ச்சர், 1969ஆம் ஆண்டு லிங்கன்ஷையரில் உள்ள லூத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவராகப் பதவியேற்பதற்கு முன்னர், ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டிருந்தார்.








