துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை மருத்துவமனையில் சந்தித்து அவரது துணிச்சலையும் செயலையும் பாராட்டியுள்ளார்.
செப்டெம்பர் 30ஆம் திகதி துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கிப் பயணித்த flydubai FZ1073 விமானத்தின் விமானி அறைக்குள் தாக்குதல் நடத்தப்பட்டதில் கேப்டன் மச்சார் பலத்த காயமடைந்தார்.
எனினும், காயமடைந்த நிலையிலும் விமானி அறைக் கதவைத் திறக்க முடிந்ததால், பணியாளர்களும் பயணிகளும் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் விமானம் பாதுகாப்பாக சவூதி அரேபியாவின் தபூக் நகருக்கு திருப்பி விடப்பட்டது.
கேப்டன் மச்சார் “துணிச்சல், பொறுப்புணர்வு மற்றும் மனித உயிர்கள் மீதான அக்கறையின் மிக உயர்ந்த வெளிப்பாட்டை” வெளிப்படுத்தியுள்ளதாக ஷேக் ஹம்தான் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஐக்கிய அரபு அமீரகத் தலைமையின் முழுமையான பாராட்டும் அங்கீகாரமும் இருப்பதாகவும், அவர் நாட்டின் அணியிலும் தேசிய வரலாற்றிலும் இடம்பெற்றிருப்பது குறித்து நாடு பெருமை கொள்வதாகவும் ஷேக் ஹம்தான் குறிப்பிட்டுள்ளார்.
விமானத்தின் துணை விமானி விமானத்தை கைப்பற்ற முயன்றதுடன், கேப்டனை கோடரியால் தாக்கி பயங்கரவாதச் செயலில் ஈடுபட முயன்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கேப்டன் மச்சார், விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளின் நடவடிக்கைகள் பாரிய விளைவுகளைத் தடுக்க உதவியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பொதுமக்கள் விமானப் போக்குவரத்து ஆணையமும் பாராட்டியுள்ளது.
கேப்டன் மச்சார் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் திரும்பியுள்ளதுடன், மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலமாக குணமடைந்து வருவதாக அபுதாபியிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.








