இலங்கையில் சில மருந்தகங்கள் ஊடாக அல்லது அவற்றை மறைவாகப் பயன்படுத்தி போதை மாத்திரைகள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 11ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றிய அவர், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போதை மாத்திரைகள் பயன்படுத்தப்படுவது தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.
சில மருந்தகங்கள் இவ்வாறான மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களாக அறியப்படுவதாகவும், சிலர் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மருந்தகங்களை மறைவாகப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆயுர்வேத நிறுவனங்கள் என்ற போர்வையில் இயங்கும் சில நிலையங்களில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகவும் பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மருந்தக உரிமையாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி மாவட்ட மட்ட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் ஒட்டுமொத்த மருந்தகத் துறைக்கும் பொருந்தாது எனத் தெரிவித்த அவர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மருந்தக உரிமையாளர்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், ஒருவரின் பதவி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமமாக சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.








