மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் முதன்முறையாக, மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.
அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நோயாளியின் குடும்பத்தினர், உயிரிழப்பிற்குப் பின்னரும் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்ற உயர்ந்த மனிதநேய எண்ணத்துடன் உறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி தானமாகப் பெறப்பட்ட இரு சிறுநீரகங்களும், நீண்டகாலமாக சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த இருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நேற்று (02) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்றதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆஷாத் எம். கனீபா தெரிவித்துள்ளார்.
“உறுப்பு தானம் என்பது பல உயிர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னதமான கொடையாகும். மன்னாரில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, சமூகத்தில் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மேலும் அதிகரிக்க உதவும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உறுப்பு தானத்திற்கு சம்மதித்த நோயாளியின் குடும்பத்தினருக்கும், வைத்திய நிபுணர்கள், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், சத்திர சிகிச்சையை மேற்கொண்ட யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் வைத்தியசாலைப் பணிப்பாளர் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.








