முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சி ஒக்டோபர் 4ஆம் திகதி திட்டமிட்டுள்ள பேரணியை முன்னிட்டு, அதிகாரிகளால் லொறிகள் மற்றும் சரக்குக் கொள்கலன்கள் கைப்பற்றப்படலாம் என்ற அச்சத்தில் போக்குவரத்து நிறுவனங்கள் வடக்கு நோக்கிய பயணங்களைத் தவிர்த்து வருகின்றன.
இதனால் பாகிஸ்தானின் பிரதான துறைமுகமான கராச்சியில் சரக்குக் கொள்கலன்கள் குவிந்து வருவதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
PTI பேரணிக்கு முன்னதாக இஸ்லாமாபாத்துக்கான அணுகலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, செப்டெம்பர் மாதத்தில் பொலிஸார் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவதற்காகக் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்துக்குச் செல்லும் பிரதான வீதிகளில் மணல் நிரப்பப்பட்டு ஒன்றுடன் ஒன்று பற்றவைக்கப்பட்ட சரக்குக் கொள்கலன்கள் தடுப்புகளாக வைக்கப்பட்டுள்ளன.இம்ரான் கானை விடுதலை செய்யக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் அவர் சிறையில் உள்ளார்.
வாகனங்கள் கைப்பற்றப்படலாம் என்ற அச்சத்தால் சில சாரதிகள் பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் நோக்கிய பயணங்களை நிறுத்தியுள்ளதாக போக்குவரத்துத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் கராச்சியில் கொள்கலன்கள் குவிந்து, பொருட்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, ஜெலம், பெஷாவர் மற்றும் அட்டொக் உள்ளிட்ட பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில நிறுவனங்கள் குஜ்ரன்வாலாவுக்கு அப்பால் பயணங்களை நிறுத்தியுள்ளன அல்லது மாற்று வழிகளைப் பயன்படுத்தி வருகின்றன.
கொள்கலன் ஒன்று கைப்பற்றப்பட்டால், அதற்கான தாமதக் கட்டணம் நாளொன்றுக்கு 30,000 முதல் 40,000 பாகிஸ்தான் ரூபாய் வரை (சுமார் 110–150 அமெரிக்க டொலர்) செலவாகும் என போக்குவரத்துத் துறை பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
தாமதமான விநியோகங்கள், பயன்பாடின்றி நிற்கும் லொறிகள் மற்றும் சர்வதேச கப்பல் நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் உள்ளிட்ட மேலதிக இழப்புகளும் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் பாகிஸ்தானின் உள்துறை, தகவல், வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகங்கள், பஞ்சாப் பொலிஸ் மற்றும் மாகாண உள்துறை திணைக்களம் ஆகியவற்றிடம் ரொய்ட்டர்ஸ் கருத்துக் கோரிய போதிலும் பதில் கிடைக்கவில்லை.








