இலங்கைக்கு அருகிலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் சிக்கியுள்ள ஈரானியக் கப்பல்களுக்கு சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
அமெரிக்காவின் இரண்டாம் நிலைத் தடைகள் (Secondary Sanctions) எந்தவொரு குறிப்பிட்ட நாட்டையோ அல்லது இலங்கையையோ இலக்காகக் கொண்டு விதிக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளர் நாயகமுமான துஷார ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
மாறாக, இவை உலகளவில் பொதுவாக நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் கொள்கையின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்கு அருகில் சிக்கியுள்ள ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களுக்கு அத்தியாவசியச் சேவைகளை வழங்கினால், இலங்கைக்கு எதிராகத் தடைகள் விதிக்கப்படலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தியைத் தொடர்ந்து இலங்கை வெளிவிவகார அமைச்சு குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.







