இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனம் (CPSTL) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில், ஜெட் ஏ-1 (Jet A-1) விமான எரிபொருள் குழாய்ப் பாதை மற்றும் புதிய சேமிப்புத் தாங்கிகள் அமைக்கும் பணிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
நாட்டின் வலுசக்தித் துறை உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், விமான எரிபொருள் விநியோகப் பாதுகாப்பை உறுதி செய்தல், போக்குவரத்துச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் எதிர்கால விமானப் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, முத்துராஜவெல சேமிப்பு வளாகத்திலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வரை 21 கிலோமீற்றர் நீளமும் 10 அங்குல விட்டமும் கொண்ட பூமிக்கடியிலான விசேட எரிபொருள் குழாய்ப் பாதை அமைக்கப்படவுள்ளது.
அத்துடன், இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் மொத்தமாக 92,000 கனமீற்றர் கொள்ளளவைக் கொண்ட 5 புதிய ஜெட் ஏ-1 விமான எரிபொருள் தாங்கிகள் அமைக்கப்படவுள்ளன.
இதில், தலா 30,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட 2 பெரிய தாங்கிகளும், தலா 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட 2 நடுத்தர தாங்கிகளும், 2,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தாங்கியும் அடங்குகின்றன.
இந்தத் திட்டம் 30 மாதங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தினால் முத்துராஜவெல முனையத்தில் எரிபொருள் சேமிப்பு திறனை வலுப்படுத்தும் வகையில் மேலும் 3 புதிய தாங்கிகள் அமைக்கப்படவுள்ளன.
இதில், தலா 15,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட 2 தாங்கிகளும், 10,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட ஒரு தாங்கியும் அடங்குகின்றன.
இதன் மூலம் 40,000 கனமீற்றர் கூடுதல் எரிபொருள் சேமிப்பு திறன் கிடைக்கவுள்ளது. 18 மாத ஒப்பந்தக் காலத்தைக் கொண்ட இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைய உருவாக்கப்படும் இந்தப் புதிய கட்டமைப்புகள், நாட்டின் எரிபொருள் கையிருப்பை வலுப்படுத்தி, தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.








