சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்குத் தேவையான அரச மட்டத்திலான தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமாஞ்ஞ மற்றும் அமரபுர பீடங்களின் மகாநாயக்க தேரர்களால் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ராமாஞ்ஞ பீடத்தின் மகாநாயக்கர் மகுலேவே விமல நாயக்க தேரர் மற்றும் அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் கரகொட உயனகொட மைத்ரிமூர்த்தி மகா நாயக்க தேரர் ஆகியோரால் ஒப்பமிடப்பட்ட இந்தக் கடிதம், தென்னிலங்கை பிரதான சங்கநாயக்கர் ஓமல்பே சோபித தேரரினால் ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகேவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, இந்து சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்து குருமார் சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை இந்து கலாசார சபையின் தலைவருமான சிவஸ்ரீ கே.வி.கே. வைதீஸ்வர குருக்களினாலும் மற்றொரு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பாகொட சந்தவங்சி தேரர், வேபடைர தம்மசிறி தேரர், இந்து குருமார் சங்கத்தின் உறுப்பினர் சிவஸ்ரீ குகதாச குருக்கள், சட்டத்தரணி தனுஜா நவரத்ன மற்றும் சமூக செயற்பாட்டாளர் ஆர்.ஏ. அமில சஞ்சீவ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








