அப்ரா அன்சார்
கொழும்பு—ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் புதிய கல்வியாண்டு ஆரம்பித்துள்ள நிலையில், சுமார் 45,000 பாலஸ்தீன மாணவர்கள் இஸ்ரேலிய அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்று வருவதாக சர்வதேச ஊடகமான அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இது ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் கல்வி கற்கும் பாலஸ்தீன மாணவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானதாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வசிக்கும் பல ஆசிரியர்களுக்கு கிழக்கு ஜெருசலேமுக்குள் நுழைவதற்கான அனுமதி வழங்கப்படாததால், கிறிஸ்தவ பாடசாலைகள் புதிய கல்வியாண்டை வேலைநிறுத்தத்துடன் ஆரம்பித்துள்ளன.
பாலஸ்தீன தரப்பில், இது தங்களது தேசிய உரிமைகளில் ஆக்கிரமிப்பு அதிகாரிகளின் மேலும் ஒரு தலையீடாகக் கருதப்படுகிறது.
அதேவேளை, பாலஸ்தீன கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களும், பாலஸ்தீன அதிகாரசபை நிறுவனங்களில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் “வெறுப்பை கற்பிக்கின்றனர்” எனக் கூறி இஸ்ரேல் தனது தலையீட்டை நியாயப்படுத்துகிறது.
சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ், ஆக்கிரமிப்பு அதிகாரம் கல்வி நிறுவனங்களின் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவற்றின் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட விளக்கக் குறிப்பின்படி, ஆக்கிரமிப்பு அதிகாரம் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கல்வி முறையை தனது சொந்த கட்டமைப்புகளால் மாற்றவோ அல்லது புதிய பாடத்திட்டங்களைத் திணிக்கவோ கூடாது.
எனினும், பாலஸ்தீன கல்வித்துறையில் இஸ்ரேலின் தலையீடு கிழக்கு ஜெருசலேமைத் தாண்டி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் அண்மைக்காலமாக காஸா பகுதி வரையிலும் விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்ஜசீரா








