அதிகரித்து வரும் போட்டித் தன்மையால் குழந்தைகள் இழந்துவரும் மன சுதந்திரம், ஒழுக்க வளர்ச்சி மற்றும் குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்க வேண்டுமென பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், “வலுவான மனங்கள் – வளமான குழந்தைகள்” என்ற இவ்வாண்டின் கருப்பொருளை முன்னிறுத்தி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் பெரியவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்படாமல், அவர்கள் யார் என்பதையும், எதிர்காலத்தில் யாராக விரும்புகின்றனர் என்பதையும் சமூகத்தினர் புரிந்துகொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி அதன் குழந்தைகளின் புன்னகையில் பிரதிபலிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“குழந்தைகளுக்கான பாதுகாப்பான உலகம் – படைப்பாற்றல் மிக்க எதிர்கால தலைமுறை” என்ற நோக்குடன், தேசியம், மதம், பொருளாதார நிலை அல்லது சமூக அந்தஸ்து என எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து குழந்தைகளையும் பாதுகாப்பதற்கு அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் உடல் மற்றும் மன நலனை உறுதி செய்தல், அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் தேவையான வாய்ப்புகளை வழங்குதல் தொடர்பான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய அமைச்சர், வலுவான இலங்கையின் எதிர்கால தலைமுறையாக பெருமையுடன் உலகை எதிர்கொள்ளுமாறு குழந்தைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.








