2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்குரிய இறுதி வருமான வரிச் செலுத்தலை இன்று (30) நிறைவு செய்யுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரி செலுத்துவோருக்கு அறிவித்துள்ளது.
நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் கூட்டாண்மை வியாபாரங்களின் வருமான வரியைச் செலுத்தும் அனைத்து வரி செலுத்துவோரும் கொடுப்பனவு காலப்பகுதி குறியீடாக (Payment Period Code) 25260 ஐப் பயன்படுத்த வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, உரிய வரி வகைக்கான குறியீடுகள் பின்வருமாறு:
- நிறுவன வருமான வரி – Tax Type Code 02
- தனிநபர் வருமான வரி – Tax Type Code 05
- கூட்டாண்மை வியாபார வருமான வரி – Tax Type Code 09
இணையவழியில் வரிகளைச் செலுத்துவதற்கான வசதிகள் காணப்படுவதுடன், வரி செலுத்துவோர் எந்தவொரு இலங்கை வங்கி (Bank of Ceylon) கிளைக்கும் சென்று கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.
குறிப்பிட்ட இறுதித் திகதிக்குப் பின்னர் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும்போது வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, உரிய காலக்கெடுவுக்குள் வரிகளைச் செலுத்துமாறு வரி செலுத்துவோரிடம் திணைக்களம் கோரியுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 1944 என்ற உடனடித் தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொள்ள முடியும்.








