ஒக்டோபர் மாதத்திற்குரிய எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) இரவு வெளியிடப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், வழக்கமாக மாதத்தின் கடைசி நாளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டார்.
இம்முறை விலை திருத்தத்தின்போது, டீசல் லீட்டர் ஒன்றுக்கு 70 ரூபாய் மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
சில நிறுவனங்கள் டீசல் லீட்டர் ஒன்றுக்கு 120 ரூபாய், 135 ரூபாய், 192 ரூபாய் மற்றும் 247 ரூபாய் என்ற அளவில் நஷ்டத்தை எதிர்கொள்வதாக அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் மானியம் வழங்கப்படுவதன் காரணமாக இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் பாரிய நிதிச் சுமையை எதிர்கொள்வதாகவும், வருட இறுதியில் கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டம் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், டீசலுக்கு வழங்கப்படும் மானியம் பெட்ரோலுக்கு வழங்கப்படாது என்றும் வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.








