லலித் ரத்நாயக்க இயக்கிய ‘Riverstone’ திரைப்படம், 99ஆவது ஒஸ்கார் விருதுகளின் சர்வதேச முழுநீளத் திரைப்படப் பிரிவுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ திரைப்படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹாதிவுல்வெவ இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை அறிவித்துள்ளார்.
இலங்கைக்கான தேசிய ஒஸ்கார் தெரிவுக்குழுவின் தலைவராகவும் செயற்படும் மஹாதிவுல்வெவ, புதிதாக ஒழுங்குபடுத்தப்பட்ட நடைமுறையின் கீழ் இந்தத் தெரிவு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறையின்படி, உள்ளூர் தெரிவுக்குழுவின் அங்கீகாரத்துடன், அதன் உறுப்பினர்களின் தொழில்சார் தகைமைகளும் ஒஸ்கார் அகாடமியின் விதிமுறைகளுக்கு அமைவாகக் கருத்திற்கொள்ளப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இவ்வாறான நடைமுறையின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட திரைப்படம் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை” என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய ஒஸ்கார் தெரிவுக்குழுவில் திரைப்பட இயக்குநர்களான அசோக ஹந்தகம, ரவீந்திர குருகே, அனோமா ராஜகருணா, விஸாகேச சந்திரசேகரம், திரைப்பட விமர்சகர் அருண குணரத்ன, இசையமைப்பாளர் லக்ஷ்மன் ஜோசப் டி சேரம் மற்றும் திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர் உதித்த லக்மால் கஹந்தவாரச்சி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தெரிவுக்குழு 6 திரைப்படங்களை பரிசீலித்தது. அவற்றில் 5 சிங்கள மொழித் திரைப்படங்களும் ஒரு தமிழ் மொழித் திரைப்படமும் அடங்கும்.
அவை:
- Vihanga Premaya (Peacock Lament) – தயாரிப்பு மற்றும் இயக்கம்: சஞ்சீவ புஷ்பகுமார
- Ayu – இயக்கம்: சத்ர வீரமன்; தயாரிப்பு: யசஸ் ரத்நாயக்க
- Father – தயாரிப்பு: சாந்த கீததேவ; இயக்கம்: சாமிந்த ஜயசூரிய
- Anthony – தயாரிப்பு: ராமதாஸ் சுகந்தினி மற்றும் ராமதாஸ் சத்யராஜ்; இயக்கம்: சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர
- Riverstone – தயாரிப்பு: பிரபாத் ரொஷான் மற்றும் நிமந்தி பொரேஜ்; இயக்கம்: லலித் ரத்நாயக்க
- Cricket Sadu – இயக்கம்: தில்ஷர ஜயமன்ன; தயாரிப்பு: ரசித்த ஜினசேன
ஆஸ்கார் அகாடமியின் விதிமுறைகளின்படி, தகுதி பெற்ற திரைப்படங்களாக இந்த ஆறு திரைப்படங்களில் நான்கு திரைப்படங்கள் தெரிவுக்குழுவால் அடையாளம் காணப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ‘Riverstone’ மற்றும் ‘Father’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இறுதிப் போட்டியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டன.
அவற்றில், 99ஆவது ஒஸ்கார் விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ சமர்ப்பிப்பாக ‘Riverstone’ திரைப்படம் இறுதியாகத் தெரிவு செய்யப்பட்டது.








