மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று சவூதி அரேபிய அரசிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளது.
செப்டம்பர் 24ஆம் திகதி எழுதப்பட்டு, சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக அவசரமானதும் மனிதாபிமான அடிப்படையிலானதுமான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு எம்.பிக்கள் கோரியுள்ளனர்.
அனோஜனுக்கு ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருந்த நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து அந்தத் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக தாங்கள் அறிந்துள்ளதாக எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான அண்மைய தகவல்களும், அவரது ஆரம்ப சிறைத்தண்டனை பின்னர் மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்குடன் தொடர்புடைய பேஸ்புக் பதிவை அனோஜன் உடனடியாக மீளப்பெற்று நீக்கியதுடன், அதற்காக மன்னிப்பும் கோரியதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்லாத்தை அவமதிக்கும் அல்லது புண்படுத்தும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை எனவும் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் இடம்பெற்ற குற்றத்தின் தன்மை, இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள், அத்துடன் அனோஜனின் தற்போதைய நிலைமை உள்ளிட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை நாடாளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சகிப்புத்தன்மை மற்றும் மனிதாபிமான உணர்வுகளைக் கருத்திற்கொண்டு, இந்த வழக்கை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறும் சவூதி அரசிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அனோஜனுக்கு அரச மன்னிப்பு பெற்றுக்கொடுப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் முன்னெடுத்து வரும் நிலையில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.








