கதிர்காமம் – புத்தல வீதியில் காட்டு யானைகளுக்கு உணவளிக்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
வாகன சாரதிகள் யானைகளுக்கு தொடர்ந்து உணவளிப்பதால், சுமார் 8 காட்டு யானைகள் உணவுக்காக வீதியில் வாகனங்களை எதிர்பார்த்து நிற்கப் பழகியுள்ளன என வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட 2,000க்கும் அதிகமான வாகனங்கள் நாளாந்தம் இந்த வீதியைப் பயன்படுத்துகின்றன. மொனராகலை, வெல்லவாய மற்றும் பண்டாரவளை நோக்கிச் செல்லும் வாகனங்களும் இதில் அடங்குகின்றன.
உணவு வழங்கப்படாத சந்தர்ப்பங்களில் சில யானைகள் வாகனங்களை தாக்குவதற்கும் அவற்றைக் கவிழ்க்க முயற்சிப்பதற்கும் இடமுள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றில் யானையொன்று பேருந்தை தாக்கியதில், பேருந்து கவிழ்ந்து சுமார் 40 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த வீதியில் யானைத் தாக்குதல்களால் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உயிரிழந்துள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்களில் வருடாந்தம் 100க்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைவதாகவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீதி யால தேசிய பூங்காவின் 2ஆம் வலயத்தின் ஊடாக செல்கின்றதுடன், பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும், வாகனங்களில் இருந்து காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு உணவளிப்பது சட்டவிரோதமானது என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொவிட்-19 தொற்றுநோய் காலத்தில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தபோது, யானைகள் இந்த வீதியோரத்தில் தங்கியிருக்கவில்லை எனவும், வனப்பகுதிக்குள் காணப்படும் இயற்கையான உணவு மூலங்களையே நம்பியிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேருந்து மற்றும் சஃபாரி ஜீப் சாரதிகள் தொடர்ந்து யானைகளுக்கு உணவளித்ததன் காரணமாகவே தற்போதைய நிலைமை ஓரளவுக்கு உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, யானைகளுக்கு உணவளிக்கும் வாகனங்களை வீடியோ பதிவு செய்து, வனஜீவராசிகள் சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஊவா மாகாண வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் டபிள்யூ. ஏ. இந்திரஜித் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.








