போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், 104 புதிய பேருந்துகளுடன் புதிய மெட்ரோ பேருந்து வழித்தடங்கள் நாளை (29) முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, Millennium City – கொழும்பு கோட்டை, பாணந்துறை – தெமட்டகொட ரயில் நிலையம், கெஸ்பேவ – பேட்டை மற்றும் ஏகல – பத்தரமுல்ல ஆகிய வழித்தடங்களில் புதிய மெட்ரோ பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
தற்போது கடவத்தை – மாகும்புர மற்றும் மாகும்புர – கொழும்பு கோட்டை ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ பேருந்து சேவைகள் இடம்பெற்று வருகின்றன.
மேலும், கொழும்பு நகருக்குள் பயணிப்பதற்காக சுற்றுவழித்தட சேவையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, மெட்ரோ பேருந்து சேவையின் கீழ் உள்ள வழித்தடங்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரிக்கவுள்ளது. இந்த ஏழு வழித்தடங்களிலும் மொத்தம் 121 மெட்ரோ பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில் முன்னுரிமை பேருந்து பாதையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.
மெட்ரோ பேருந்து சேவை ஆரம்ப கட்டமாக மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பின்னர் யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா மற்றும் காலி உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய ஏனைய மாகாணங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.








