புதிய சுற்றில் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்திற்கான பயனாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் சில வாரங்களுக்குள் புதிய பயனாளர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும் எனவும், அதில் இடம்பெறாதவர்கள் உள்ளிட்ட எவரேனும் மேன்முறையீடு செய்ய விரும்பினால் அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ‘அஸ்வெசும’ பயனாளர்கள் தொடர்பில் மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும், அவை இம்மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் ‘அஸ்வெசும’ பயனாளர்களின் எண்ணிக்கை 1,773,445 ஆகப் பதிவாகியிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் அது 1,761,116 ஆகக் காணப்பட்டது.
2025 ஆம் ஆண்டில் பயனாளர்களின் எண்ணிக்கை 2,439,917 ஆக அதிகரித்திருந்த போதிலும், இந்த ஆண்டு அது 1,251,522 ஆகக் குறைவடைந்துள்ளது.
‘அஸ்வெசும’ நலன்புரிக் கொடுப்பனவுகள் தீவிர வறுமைக்கோட்டிலுள்ளோர், வறுமைக்கோட்டிலுள்ளோர், ஆபத்தை எதிர்நோக்கியுள்ளோர் மற்றும் இடைநிலை நிலையில் உள்ளோர் என நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டு வந்தன.
இவற்றில் இடைநிலை பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த டிசம்பர் மாதத்துடனும், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள பிரிவினருக்கான கொடுப்பனவுகள் கடந்த ஜூன் மாதத்துடனும் நிறைவடைந்தன.
இதனையடுத்து, தீவிர வறுமைக்கோட்டிலுள்ளோர் மற்றும் வறுமைக்கோட்டிலுள்ளோர் ஆகிய இரு பிரிவினருக்கு மாத்திரமே அரசாங்கம் ‘அஸ்வெசும’ நலன்புரிக் கொடுப்பனவுகளை வழங்கி வந்த நிலையில், புதிய பயனாளர்களைத் தெரிவு செய்வதற்கான மீள் கணக்கெடுப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.








