எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ‘எல் நினோ’ காலநிலை நிகழ்வின் தாக்கம் தீவிரமடையக்கூடும் என்பதால், இலங்கையின் பல பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பசுபிக் சமுத்திரத்தில் வலுவடைந்து வரும் எல் நினோ நிலைமை மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் எதிர்பார்க்கப்படும் வளிமண்டல மாற்றங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. தற்போது வறண்ட வானிலை நிலவும் பகுதிகளில் எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளுக்குப் பின்னர் இடி, மின்னலுடன் கூடிய மழை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
அதேவேளை, மாலை 2 மணிக்குப் பின்னர் ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனிடையே, காங்கேசன்துறை முதல் புத்தளம் வரையிலும், மாத்தறை முதல் பொத்துவில் வரையிலுமான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 55 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2 முதல் 3 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.மேலும், பேருவளை முதல் மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில் கடல் அலைகள் கரையைத் தாண்டி வருவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, கடற்படையினர், கடற்றொழிலாளர்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வானிலை அதிகாரி மலித் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.








