வீடுகள், வர்த்தக நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்களை வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்கள், குத்தகைதாரர்களின் பின்னணியை முறையாகச் சரிபார்த்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ்மா அதிபரின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த, போதைப்பொருட்கள், ஆயுதங்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பொருட்கள் வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்களில் இருந்து அடிக்கடி மீட்கப்படுவதாக தெரிவித்தார்.
சில சொத்து உரிமையாளர்கள் குத்தகைதாரர்களின் பின்னணியை முறையாக ஆராயாமல் தங்களது சொத்துக்களை வாடகைக்கு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாடகைக்கு விடப்பட்ட சொத்தில் குற்றச்செயல்கள் இடம்பெறும் பட்சத்தில், சம்பவத்தின் தன்மை மற்றும் நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய சொத்து உரிமையாளர்களும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும், தமது பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நடவடிக்கைகள் தொடர்பில், குறிப்பாக புதிதாக அறிமுகமில்லாத நபர்கள் அப்பகுதியில் நடமாடுவது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களைக் கண்டறிந்து தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார்.
இலங்கையில் சட்டவிரோத போதைப்பொருட்களின் புழக்கத்தைக் குறைத்து பொதுமக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் தொடர்ச்சியான போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.








