இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த காரணிகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று (25) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவி சினாரி லக்மந்தி ஹெட்டியாராச்சியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கைது செய்திருந்தது.
கொழும்பு இலக்கம் 11 மேல் நீதிமன்றத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பில், ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையைப் பெற்றுத் தருவதற்கு நீதிபதியைச் செல்வாக்குச் செய்யுமாறு நீதிமன்ற அலுவலக உதவியாளர் ஒருவருக்கு 50,000 ரூபாய் இலஞ்சமாக வழங்கியதாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.








