சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் விமானம் ஐக்கிய நாடுகள் சபைக்குச் செல்லும் வழியில் பிரான்ஸ் வான்வெளியைக் கடக்க அனுமதிக்கப்பட்டது சர்வதேச சட்டத்திற்கு முழுமையாக இணங்கியதாகும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
“கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவரை பயணியாகக் கொண்ட அரச விமானம் தனது நாட்டின் வான்வெளியைக் கடந்து செல்வது தொடர்பாக ரோம் சட்டம் எந்தவொரு கடமையையும் விதிக்கவில்லை” என பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் பாஸ்கல் கொன்பவ்ரூ (Pascal Confavreux) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக Reuters செய்தி வெளியிட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு போர்க்குற்றங்கள் தொடர்பில் நெதன்யாகுவுக்கு எதிராக ICC கைது உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக அவர் பல நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ICC-யை நிறுவிய ரோம் சட்டத்தில் பிரான்ஸ் கையெழுத்திட்டுள்ளதுடன், நீதிமன்றத்துடன் ஒத்துழைக்க வேண்டிய சட்டபூர்வ கடப்பாட்டையும் கொண்டுள்ளது. இதில், கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர்கள் தனது நாட்டிற்குள் நுழைந்தால் அவர்களைக் கைது செய்வதும் அடங்கும்.
FlightRadar24 என்ற விமானக் கண்காணிப்பு செயலியின் தகவலின்படி, நெதன்யாகு பயணித்த விமானம் கிரீஸ், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வான்வெளியைக் கடந்து சென்றுள்ளது.








